
சிப்பாங், ஜூலை 28 – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (KLIA) டெர்மினல் 1இல், விமானம் தாமதமானதைத் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட இந்தோனேசிய ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
KLIA மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஷ்னர் ரவி முனுசாமி வெளியிட்ட அறிக்கையில், இந்தச் சம்பவம் நேற்று நிகழ்ந்ததாக தெரிவித்தார்.
இந்தோனேசியாவுக்குச் செல்லவிருந்த அவரது விமானம் ஐந்து மணி நேரம் தாமதமானதால், 25 வயதான அந்த நபர் விமான நிறுவன ஊழியர்களிடம் ஆபாச வார்த்தைகள் பேசி, மிரட்டல் விடுத்ததுடன் ஆத்திரமாக நடந்துகொண்டதாக அவர் கூறினார்.
நிலையைச் சமாளிக்க விரைந்த பாதுகாப்பு அதிகாரிகள், அவரை முதல் டெர்மினலிலுள்ள குடிநுழைவுத் துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
எனினும், அங்கும் அவர் ஆவேசமாகவும் ஒழுங்கீனமாகவும் நடந்துகொண்டதுடன், குடிநுழைவுத் துறை அதிகாரிகளின் உத்தரவுகளுக்கும் இணங்க மறுத்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, KLIA துணை போலீசார் அவரைக் கைது செய்து மேல் விசாரணைக்காக KLIA போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் சந்தேகநபருக்கு நான்கு நாட்கள் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



