
லெங்கோங், செப். 11 — பேராக், லெங்கோங்கில் உள்ள முழு தங்குமிடப் பள்ளி ஒன்றில் உணவு நச்சுத்தன்மையால் 159 மாணவர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட உணவு வழங்கும் வளாகத்தை உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் செப்டம்பர் 9ஆம் தேதி பதிவானதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஏ. சிவநேசன் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்கள் 13 முதல் 52 வயதுக்குட்பட்டவர்கள். முதல் அறிகுறி செப்டம்பர் 9ஆம் தேதி இரவு 11.30 மணிக்கும், கடைசி அறிகுறி மறுநாள் பிற்பகல் 1.40 மணிக்கும் பதிவானது.
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுகாதார ஆய்வில், உணவு வளாகத்தின் தூய்மை மதிப்பீடு 78.16 விழுக்காடாகப் பதிவானது. சுத்தம் மற்றும் பூச்சிக் கட்டுப்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளும் வகையில், ஹுலு பேராக் மாவட்ட சுகாதார அலுவலகம் வளாகத்தை மூட உத்தரவிட்டது.
லெங்கோங் சுகாதார கிளினிக்கின் மருத்துவக் குழுவினர் பள்ளிக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிசோதனை மற்றும் ஆரம்ப சிகிச்சை வழங்கினர். அவர்களில் 10 பேர் மேலதிக சிகிச்சைக்காக சுகாதார கிளினிக்கிற்கு அனுப்பப்பட்டனர்.
எனினும், அனைவரின் உடல்நிலையும் தற்போது சீராக இருப்பதுடன், யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை.
உணவு நச்சுத்தன்மைக்கான காரணத்தைக் கண்டறிய 34 மருத்துவ மாதிரிகள், 14 சுற்றுச்சூழல் மாதிரிகள் மற்றும் ஒரு உணவு மாதிரி சேகரிக்கப்பட்டு, ஈப்போ பொது சுகாதார ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக சிவநேசன் கூறினார்.



