
கோப்பேங், ஜூலை-29-பேராக், கோப்பேங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘கோப்பேங் சமூகத் தீ பாதுகாப்பு கார்னிவல் 2026’, 700-க்கும் மேற்பட்ட பொது மக்களின் பங்கேற்புடன் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறைக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும் தேஜா சட்டமன்ற உறுப்பினருமான Sandra Ng Shy Ching இந்நிகழ்வை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
இந்த கார்னிவல் விழாவில், வீடுகள், வாகனங்கள், மின்சாரம் மற்றும் சமையலறைகளில் ஏற்படும் தீவிபத்துகளைக் கையாளும் செயல்முறை விளக்கங்கள் பொது மக்களுக்குக் காண்பிக்கப்பட்டன.
மேலும், பாம்புகளைப் பிடிக்கும் முறைகள் மற்றும் தீயணைப்புத் துறையின் ‘K9’ மோப்ப நாய் படையின் சிறப்புக் காட்சிகளும் இடம்பெற்றன.
இவற்றுடன், இலவச சுகாதாரப் பரிசோதனை, ரஹ்மா மலிவு விலை விற்பனை, சிறார்களுக்கான வண்ணம் தீட்டும் போட்டி மற்றும் நீச்சல் விழிப்புணர்வுத் திட்டங்களும் நடத்தப்பட்டுப் பொது மக்களின் கவனத்தை ஈர்த்தன.
பொது மக்களின் இந்த அபார வரவேற்பு, தீத் தடுப்பு மற்றும் பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வில் சமுதாயத்திற்கு இருக்கும் ஆர்வத்தை உறுதிப்படுத்துவதாகக் கோப்பேங் தீயணைப்பு நிலையத் தலைவர் ஹேமநாதன் சுப்ரமணியம் நன்றி தெரிவித்தார்.



