கோலாலம்பூர், ஆகஸ்ட் -26 – மஸ்ஜித் இந்தியா நில அமிழ்வுச் சம்பவத்தைத் தொடர்ந்து கோலாலம்பூர் வசிப்பதற்கு பாதுகாப்பானதல்ல எனக் கூறப்படுவதை மாநகர மன்றத் தலைவர் டத்தோ ஸ்ரீ மைமூனா மொஹமட் ஷாரிஃப் (Datuk Seri Maimunah Mohd Sharif) திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பரப்பப்படும் அத்தகையக் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்றார் அவர்.
கோலாலம்பூரை நாம் கட்டியெழுப்பியது இன்று நேற்றல்ல.
இத்தனைக் காலமும் அது அனைவருக்கும் பாதுகாப்பானதாகத்தான் இருந்து வந்துள்ளது.
எனவே, திடீரென வந்து, கோலாலம்பூர் வசிப்பதற்கு பாதுகாப்பானதல்ல எனக் கூறுவோர், அதற்கான வலுவான ஆதாரங்களை காட்டிட வேண்டும் என்றார் அவர்.
ஜாலான் மஸ்ஜித் இந்தியாவும், கோலாலம்பூரின் மற்ற பகுதிகளும் பொது மக்கள் நடமாட பாதுகாப்பானதே என்ற உத்தரவாதத்தையும் டத்தோ ஸ்ரீ மைமூனா வழங்கினார்.
தற்போதைக்கு மேலும் நிலம் உள்வாங்கும் சம்பவங்கள் நடக்கும் அபாயம் குறித்து கண்டறிய புவியியல் துறை மற்றும் பொதுப் பணித் துறையை உள்ளடக்கியப் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
நாட்டிலேயே கோலாலம்பூர் தான் மிகவும் பாதுகாப்பாற்ற இடமென்றும், எந்த நேரத்திலும் அங்கு ராட்சத நில அமிழ்வு (giant sinkhole) ஏற்படலாமென்றும் 2015-ல் இயற்கை ஆர்வலர் ஒருவர் பதிவேற்றியச் செய்தி முன்னதாக மீண்டும் வைரலானது.
கோலாலம்பூரின் அடித்தளம் 40-60 விடுக்காடு சுண்ணாம்புக் கற்களால் ஆனதென்றும், இடைவிடாத மேம்பாட்டுத் திட்டங்களாலும், ஒழுங்கற்ற வடிகால் அமைப்புகளாலும் அந்த giant sinkhole சீக்கிரமே நிகழக்கூடுமென்றும் அந்த வைரல் செய்தியில் கூறப்பட்டிருந்தது.