
கோல்ப் கிளப் தாக்குதல் சம்பவத்தில் லோரி ஓட்டுநர் மீது திருட்டு குற்றச்சாட்டு
பட்டர்வெர்த் –
கோல்ப் கிளப்பில் போலீஸ்காரர் ஒருவரை தாக்கியதாக அண்மையில் குற்றஞ்சாட்டப்பட்ட லோரி ஓட்டுநர் ஒருவர் மீது இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் திருட்டு குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது.
30 வயதுடைய சுல் மசுவான் சுல்ஹில்மான் சுரேஸ் குமார் ( Zul Mazuwan Zulhilman Suresh Kumar) கை தொலைபேசி ஒன்றை திருடியதாக மாஜிஸ்திரேட் அய்னி அடிலா முகமட் பைஷால் முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
வட செபெராங் பிறை, ஜாலான் சுங்கை நியோரில் உள்ள உணவகத்தில் வெளிநாட்டு பிரஜைக்கு சொந்தமான OPPO A79 கைதொலைபேசியை திருடியதாக குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.
பிப்ரவரி 15ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு அவர் இக்குற்றத்தை புரிந்ததாக கூறப்பட்டது. தண்டனைச் சட்டத்தின் பிரிவு 380 இன் கீழ் சுமத்தப்பட்ட இந்தக் குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.



