சிகாம்பூட், ஆகஸ்ட் 9 – சட்டவிரோத கட்டுமான இடமென்றால், சீ போட்டியிலும், ஆசியப் போட்டியிலும் வென்ற தங்கப் பதக்கங்களைத் திருப்பிக் கொடுத்து விடலாமா என மலேசிய முன்னாள் கராத்தே வீரரும் மலேசிய கராத்தே நடுவருமான தென்னவன் பொன்னையா கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 7 ஆம் திகதி, கோலாலம்பூர், சிகாம்பூட்டில் உள்ள தாமான் ஸ்ரீ சீனார் சமூக மண்டபம், சட்டவிரோதமான கட்டிடம் என்ற பெயரில் உடைக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
30 ஆண்டுகளாக அம்மண்டபம் ஹயாஷி கராத்தே மாணவர்களின் பயிற்சி மையமாக அமைந்திருந்தது.
அந்த மையத்தின் வாயிலாகப் பயிற்சி பெற்ற மாணவர்கள் இதுவரை பல போட்டிகளில் பங்கேற்று 52 தங்கத்தையும், 4 வெள்ளி, 38 வெண்கலப் பதக்கங்களையும் குவித்துள்ளனர்.
அப்படியிருக்க, இந்த இடம் சட்டவிரோதம் என்றால் இப்பதக்கங்களைத் திருப்பி கொடுத்துவிடலாமா? அல்லது சட்டவிரோத மையத்தில் பயிற்சி பெற்ற விளையாட்டாளர்கள் சட்ட விரோதமானவர்களா என்று தென்னவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரூக்குன் தெத்தாங்காவால் கட்டப்பட்ட இந்த மண்டபம் 30 ஆண்டுகளாக காவல் நிலையத்தின் பக்கத்தில்தான் கராத்தே பயிற்சி மையமாக இயங்கி வருகிறது.
இந்த மையம் சட்டவிரோதமானது என்றால் எப்பொழுதோ காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து இருப்பார்கள் அல்லவா? அப்படி ஒன்றுமே நடக்கவில்லை.
காரணம், இந்த மண்டபம் ரூக்குன் தெத்தாங்காவல் அங்கீகரிப்பட்டதாகும் என இன்றைய செய்தியாளரர் சந்திப்பிலவ அவர் கூறினார்.
இம்மண்டபத்தை நாங்களே ஆட்கொள்ளவில்லை; அனைவரும் பயன்படுத்தும் பயன்மிக்க இடமாகதான் இருந்து வந்துள்ளது.
இப்போது திடீரென ஒரு பகுதி இடத்தையும் இடித்து, காலி செய்வதற்கு 1 மாதக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இங்கு பயிற்சி பெற்றுவரும் வீரர் வீராங்கனைகள் அடுத்தடுத்த சுக்மா உட்படப் பல போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள நிலையில் எங்களுக்கு இந்த கால அவகாசம் போதாது என்றும் தென்னவன் கூறினார்.
இதனிடையே, எதிர்வரும் 17ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி ஆகஸ்ட் வரை சரவாக்கில் நடைபெறவுள்ள சுக்மா விளையாட்டு போட்டியில் களம் காணவுள்ள வீரர்கள், இந்த சம்பவத்தால் மனம் உடைந்து இருப்பதை பயிற்சியாளர் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்து கொண்டார்.
இவ்விவகாரம் குறித்து சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினரும், இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சருமான ஹானா இயோ தலையிட்டு உரியத் தீர்வை எடுக்க வேண்டும் என்று இவர்கள் கேட்டுக் கொண்டனர்.
குறிப்பாக பயிற்சி பெற மாற்று இடத்தை ஒதுக்க வேண்டும் என்று தென்னவன் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.