
கோலாலம்பூர், மார்ச்-9-‘சட்டவிரோத’ கோவில்களுக்கு எதிராக போராடி வரும் சமூக ஆர்வலர் தமிம் டாஹ்ரி (Tamim Dahri), பி.கே.ஆர் கட்சியில் இணைய முறைப்படி விண்ணப்பித்துள்ளார்.
அதனை உறுதிப்படுத்திய அக்கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோ Dr Fuziah Salleh, உறுப்பினர் விண்ணப்பம், வழக்கமான சோதனை நடைமுறைகளின் கீழ் பரிசீலிக்கப்படும் என்றார்.
அனைத்து புதிய விண்ணப்பங்களும் கட்சியின் மதிப்புகளுடன் பொருந்துகிறதா என்பதை உறுதிச் செய்யும் வகையில் தகவல்கள் வடிகட்டப்படும் என துணையமைச்சருமான அவர் கூறினார்.
தமிம், மார்ச் 5-ஆம் தேதி விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளார்.
கடந்த மாதம், ‘சட்டவிரோத’ வழிபாட்டு இடங்களுக்கு எதிராக SOGO பேரங்காடி வெளியே நடத்த திட்டமிடப்பட்ட பேரணியில் தமிம் கைதுச் செய்யப்பட்டிருந்தார்.
போலீஸ் முன்கூட்டியே தலையிட்டதால் அந்த உத்தேச பேரணி பிசுபிசுத்துப் போனது.
சமூக ஆர்வலர் என்ற பெயரில் ‘சட்டவிரோத’ வழிபாட்டு இடங்களுக்கு எதிராக புறப்பட்டுள்ள தமிம் திடீரென அரசியல் பிரவேசம் செய்வதும், அதுவும் ஆளுங்கட்சியான பி.கே.ஆரிலேயே இணைய விண்ணப்பித்திருப்பதும் பொது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.



