நிபோங் தெபால், ஜூன் 18 – சட்டவிரோதமான மற்றும் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்குவது இந்த ஆண்டு உள்துறை அமைச்சகத்தின் முன்னுரிமையாக இருக்கும் என்று அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுடியோன் இஸ்மாயில் ( Saifuddin Nasution Ismail ) தெரிவித்திருக்கிறார்.
இந்த இரண்டு பிரிவினரும் அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்களை உருவாக்கியுள்ளனர். அதைத் தொடர்ந்து வெளிநாட்டினரை மணந்த மலேசிய பெண்களுக்கு வெளிநாட்டில் பிறந்த குழந்தைகள் உள்ளனர் என்று உள்துறை அமைச்சர் கூறினார்.
விண்ணப்பங்களை விரைந்து தீர்வுகாணும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. பெற்றோரின் தவறுக்காக குழந்தைகள் தண்டிக்கப்படுவது நியாயமில்லை என்று தாம் நினைப்பதாக சுங்கை பக்காப் பல்நோக்கு மண்டபத்தில் இந்திய சமூகத்தினருடனான சந்திப்புக்குப் பின்செய்தியாளர்களிடம் பேசியபோது சைபுடின் தெரிவித்தார்.
கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 15A இன் கீழ் உள்ள விதிகளைப் பயன்படுத்தி இந்த சிக்கலை தீர்க்க முடியும். குடியுரிமை தொடர்பான 14,000 விண்ணப்பங்களை தீர்ப்பதற்காக KPI எனப்படும் செயல்திறன் குறியீட்டிற்கான இலக்கை கடந்த ஆண்டு, உள்துறை அமைச்சு நிர்ணயித்திருந்ததில் வெற்றியடைந்ததையும் சைபுடின் சுட்டிக்காட்டினார்.
இந்த ஆண்டு தீர்வு காணப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை இதுவரை 15,000த்தை எட்டியுள்ளது. ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் இன்னும் நிலுவையில் உள்ளதால் அவற்றிற்கு விரைந்து தீர்வு காணப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.