
சட்டவிரோத’ வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரான பேரணியைத் தடுத்து நிறுத்துவீர்; பினாங்கில் பேரளவிலான போலீஸ் புகார்கள்
பட்டவொர்த், பிப்ரவரி-7,
‘சட்டவிரோதமாகக்’ கட்டப்பட்டதாகக் கூறப்படும் வழிபாட்டுத் தலங்களை எதிர்த்து பேரணி நடத்த கிளம்பியுள்ள சாம்ரி வினோத் மற்றும் அவரைச் சார்ந்தோருக்கு எதிராக, பினாங்கு DAP இந்தியத் தலைவர்கள் பேரளவில் போலீஸ் புகார்களைச் செய்துள்ளனர்.
பினாங்கு ஆட்சிக் குழு உறுப்பினரும் பிறை சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ எஸ். சுந்தரராஜு, பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் உள்ளிட்டோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் பட்டவொர்த் போலீஸ் நிலையத்தில் அப்புகார்களைச் செய்தனர்.
_”பேச்சுரிமை என்ற பெயரில் இதுவொரு சினமூட்டும் நடவடிக்கையாகும். இதனால் போது அமைதியும் மக்களின் நல்லிணக்கமும் பாதிக்கப்படும். எனவே, பேரணியை அனுமதிக்கக் கூடாது”_ என குமரன் வலியுறுத்தினார்.
அதிருப்தி இருந்தால் அதனை முறையான வழிகளில் அரசாங்கத்திடம் தெரியப்படுத்த வேண்டும்; அதைவிடுத்து பேரணி என்ற பெயரில் ஒற்றுமையை சீர்குலைக்கக் கூடாது என்றார் அவர்.
மதம் மாறிய இந்த சாம்ரி வினோத்தைப் பற்றி ஊரே அறியும்; மற்ற மதத்தாரை குறிப்பாக இந்துக்களை இழிவுப்படுத்துவதை வாடிக்கையாகக் கொண்டவர்… அவர் மீது நூற்றுக்கணக்கில் போலீஸ் புகார்கள் செய்யப்பட்டும் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பது ஏன் என குமரன் கேள்வி எழுப்பினார்.
3R எனப்படும் இனம், மதம், ஆட்சியாளர்கள் குறித்து நிந்தனை விஷயங்களைப் பேசக் கூடாது என மாமன்னரே நினைவுறுத்தியுள்ளார்.
எனவே, இனியும் இதுபோன்ற சினமூட்டும் செயல்களில் சாம்ரியும் அவரைப் போன்றோரும் ஈடுபட முடியாத அளவுக்கு நடவடிக்கை அமைய வேண்டுமென குமரன் கேட்டுக் கொண்டார்.
இவ்வேளையில், ‘kuil haram’ அல்லது ‘சட்டவிரோதக் கோயில்கள்’ என வழிபாட்டுத் தலங்களை முத்திரை குத்தும் போக்கை எந்தவொரு தரப்பும் நிறுத்த வேண்டுமென, DAP இளைஞர் பிரிவான DAPSY வலியுறுத்தியுள்ளது.
முஸ்லீம் அல்லாத இந்த வழிபாட்டுத் தலங்கள் நீண்ட வரலாற்றுச் சுவடு கொண்டவை; அவை கலாச்சார- பண்பாட்டுக் கூறுகளாக பார்க்கப்பட வேண்டும்.
அதைவிட, பல்லின மக்கள் ஒற்றுமையாக வாழ்வதற்கான சான்றாகும்…
எனவே, தத்தம் ஆதாயங்களுக்காக வழிபட்டுத் தலங்களை ‘kuil haram’ என முத்திரைக் குத்தும் செயல் கூடாது என DAPSY தலைவர் Woo Kah Leong அறிக்கையொன்றில் கூறினார்.
இந்நிலையில், ‘kuil haram’ எனக் கூறிக் கொண்டு பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளோரின் செயல் உண்மையில் பிரச்னைக்குத் தீர்வல்ல…மாறாக நிலைமையை மேலும் மோசமாக்கி நல்லிணக்கத்தைக் கெடுக்கும் நோக்கத்தைக் கொண்டது.
இதுபோல் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வைத் தூண்டும் செயலில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என Kah Leong கேட்டுக் கொண்டார்.
பாதுகாப்புக் காரணங்களுக்காக அப்பேரணிக்குப் போலீஸ் தடை விதித்துள்ள போதிலும், திட்டமிட்டபடி அது தொடரும் என சாம்ரி வினோத் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



