குவந்தான், ஜூன் 27 – சட்டவிரோத வேட்டையில் ஈடுபட்ட கம்போடியாவைச் சேர்ந்த மூன்று ஆடவர்கள் கைது செய்யப்பட்டதோடு அவர்கள் வேட்டையாடிய சில வனைவிலங்குகளும் பறிமுதல் செய்யப்பட்டன. குவந்தானுக்கு அருகே Simpan Berkelah காட்டுப் பகுதியில் அவர்கள் முகாமிட்டிருந்தபோது கைது செய்யப்பட்டதாக பஹாங் வனவிலங்கு மற்றும் பூங்காத்துறையின் இயக்குநர் ரோஷிடான் முகமட் யாசின் ( Rozidan Md Yasin ) தெரிவித்தார். சம்பந்தப்பட்ட காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக வேட்டையாடுவோருக்கு எதிராக செவ்வாய்க்கிழமையன்று மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அந்த நடவடிக்கையின்போது வேட்டைக்கு பயன்படுத்தப்படும் வலைகள் உட்பட பல்வேறு சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் அனைவரும் விசாரணைக்காக ஏழு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 2010 ஆம் ஆண்டின் வனவிலங்கு சட்டம் மற்றும் திருத்தப்பட்ட வனவிலங்குகள் மறுவாழ்வு சட்டத்தின் கீழ் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ரோஷிடான் தெரிவித்தார்.