
சபா, ஆகஸ்ட் 12 – சீனாவிலிருந்து சட்டவிரோதமாக உறைநிலை அதாவது frozen கோழிகளை சபாவிற்கு இறக்குமதி செய்ததாக சந்தேகிக்கப்படும் கும்பலின் திட்டங்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM முறியடித்துள்ளது.
‘Op Chick’ நடவடிக்கையில் SPRM, எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு ஆணையமான AKPS, மலேசிய சுங்கத் துறை (JKDM) ஆகியவை இணைந்து நடத்திய சோதனையில், 10 கொள்கலன்களிலிருந்த உறைநிலை கோழிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோழிகள் தவறான தகவல்களுடன் அறிவிக்கப்பட்டதுடன், கட்டாய சோதனை நடைமுறைகளும் பின்பற்றப்படவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக 30 முதல் 50 வயதிற்குட்பட்ட மூன்று ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சரக்கு அனுப்பும் முகவர்கள் மற்றும் நிறுவன மேலாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் துறைமுக அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
இந்த வழக்கு SPRM சட்டத்தின் விசாரிக்கப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட மூவரும் தடுப்புக் காவல் கோரிக்கைக்காக நாளை கோத்தா கினாபாலு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.



