தமிழகத்தின் முக்கியக் கோயில்களில் செப்டம்பர் 1 முதல் கைப்பேசிகளுக்குத் தடை

தமிழகம், ஆகஸ்ட்.12-முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அதிரடி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. செப்டம்பர் முதல் தேதியிலிருந்து தமிழகம் முழுவதும் உள்ள முக்கியக் கோயில்களுக்குள் கைப்பேசிகளைக் கொண்டுச் செல்லத் தடை விதிக்கப்படுவதாக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ். ரமேஷ் அறிவித்துள்ளார்,
கைப்பேசிப் பயன்பாட்டுத் தடையை அமல்படுத்த ஏதுவாக, செப்டம்பர் 1-ஆம் தேதிக்குள் முக்கியக் கோயில்களில் கைப்பேசிகளை ஒப்படைப்பதற்கான பிரத்தியேக மையங்கள் அமைக்கப்படும்.
பல கோயில்களின் கருவறைகள் படமெடுக்கப்பட்டு அவை புகைப்படமாகவும் காணொளியாகவும் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்படுவதைத் தொடர்ந்து அந்நடவடிக்கை எடுக்கப்பட்டுவதாக அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டிலுள்ள கோவில்களுக்குள் பக்தர்கள் கைபேசிகளை எடுத்துச் செல்வதற்கான தடை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இருப்பினும், சில கோயில்களில் இது சரியாகப் பின்பற்றப்படுவதில்லை.
கோவிலின் வளாகத்திற்குள் புகைப்படங்கள் எடுப்பது, காணொளிகள் பதிவு செய்வது, செஃல்பி எடுப்பது மற்றும் சமூக வலைத்தளங்களுக்காக ரீல்ஸ் தயாரிப்பது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
அத்தகையச் செயலால் திருக்கோவில்களின் புனிதத்தன்மையும் ஆன்மீகச் சூழலும் பாதிக்கப்படுவதோடு, பக்தர்களுக்கும் இடையூறுகள் ஏற்படுவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இவ்வேளையில், கோவில் வளாகத்தில் கைப்பேசிகளைப் பயன்படுத்த அனுமதி இல்லை என்பதை பக்தர்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், நுழைவாயில்களிலும் வெளிப் பகுதியிலும் எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட வேண்டும். ஒலிபெருக்கிகள் மூலமாகவும் அது அறிவிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
அதோடு முக்கியப் பிரமுகர்கள் மற்றும் திரைத்துறைப் பிரபலங்களுக்கும் அத்தடை பொருந்தும். விதிமுறைகளை மீறி அனுமதியின்றி புகைப்படம் மற்றும் காணொளி எடுப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும், கண்காணிப்பைப் பலப்படுத்தவும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ரமேஷ் விளக்கினார்.



