
தாவாவ், ஏப்ரல்-30-சபா, கலாபாக்கானில் தனது சொந்தக் குடும்பத்தினரையே 7 மணி நேரம் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த 38 வயது ஆடவர் மீது, கொலை முயற்சி வழக்குப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் 23-ஆம் தேதி இரவு 7 மணிக்கு தொடங்கிய இந்த பரபரப்பான சம்பவத்தில், அந்நபர் தனது மனைவி மற்றும் 3 பெண் பிள்ளைகளைக் கத்தியைக் காட்டி மிரட்டி சிறை வைத்தார்.
சுமார் 7 மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகும் அவர் பணிய மறுத்ததால், போலீஸ் அதிரடிப்படை களத்தில் இறங்கியது.
அதிரடிப்படையினர் வீட்டின் உள்ளே புகுந்து Salleh Abdul எனும் அந்த நபரை வெற்றிகரமாகக் கைதுச் செய்தனர்.
அதிர்ஷ்டவசமாக மனைவி மற்றும் குழந்தைகளுக்குக் காயம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், அவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
தனிப்பட்ட குடும்பப் பிரச்சனையே இந்த விபரீத முடிவுக்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தாவாவ் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவ்வாடவர் மீது கொலை முயற்சி மற்றும் மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டது.
மனைவிப் பிள்ளைகளை சிறைப் பிடித்தக் குற்றச்சாட்டை மறுத்தவர், அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததை ஒப்புக் கொண்டார்.
சம்பவத்தின் போது அவர் போதைப்பொருள் மயக்கத்தில் இருந்ததாக நம்பப்படும் நிலையில், மனநல பரிசோதனைக்கு உட்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.
மே 26-ஆம் தேதி வழக்கு மறுசெவிமெடுப்புக்கு வருகிறது.



