கோத்தா கினபாலு, ஜூன் 19 – சபா, கோத்தா கினபாலு நகருக்கு வெளியே, புறநகர் பகுதியில், தியாக திருநாளை முன்னிட்டு பலியிடப்படவிருந்த எருமை, கட்டுக்கு அடங்காமல் திணறிக் கொண்டு ஓடியதில், பெண் ஒருவர் காயமடைந்தார்.
கடந்த திங்கட்கிழமை காலை மணி 9.30 வாக்கில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
மெங்காதால் (Menggatal), கம்போங் டோபூரில் (Kampung Tobur) நிகழ்ந்த அச்சம்பவத்தில், 40 வயது மதிக்கத்தக்க அப்பெண் கால் எலும்பு முறிவுக்கு இலக்கானதாக கூறப்படுகிறது.
தியாக திருநாளை முன்னிட்டு, அந்த கம்பத்திலுள்ள, பள்ளி வாசலில் மக்கள் திரண்டிருந்த போது அச்சம்பவம் நிகழ்ந்தது.
ஐந்து எருமைகள் கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதில் ஒன்றின் கயிறு அறுந்ததை அடுத்து, அது திமிறிக் கொண்டு அங்கிருந்தவர்களை நோக்கி கட்டுக்கு அடங்காமல் ஓடியதாக கூறப்படுகிறது.
அப்பொழுது தனது பிள்ளையை காப்பாற்ற முற்பட்ட அப்பெண், எருமை மாடு முட்டி காயத்திற்கு இலக்கானார்.
முன்னதாக, அச்சம்பவம் தொடர்பான இரு காணொளிகள் வைரலானது குறிப்பிடத்தக்கது.