லாஹாட் டத்து, ஆகஸ்ட்-2 – சபா, லாஹாட் டத்துவில் நெஞ்சை ரணமாக்கிய சம்பவத்தில், மருத்துவமனை வார்டின் மூன்றாவது மாடியிலிலிருந்து தவறி விழுந்து 8 மாத கர்ப்பிணி மரணமடைந்தார்.
மனநலம் பாதிக்கப்பட்ட 20 வயது அப்பெண் திடீரென முரட்டுத்தனமாக நடந்துக் கொண்டதால், கடந்த செவ்வாய்க்கிழமையன்று அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
முதலில் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பப்பட்டவர், பின்னர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.
அப்போதே ஆக்ரோஷமாக நடந்துக் கொண்டவரை தாதியர்கள் மருந்து கொடுத்து அமைதிப்படுத்தினர்.
எனினும் புதன்கிழமை இரவு 7.30 மணி வாக்கில் கீழ்தளத்தின் புற்தரையில் அவர் விழுந்துக் கிடந்தது கண்டு மருத்துவமனைப் பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, அவரது வயிற்றில் உள்ள குழந்தையைக் காப்பாற்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
எனினும் குழந்தை உயிரிழந்து விட்டதை மருத்துவர்கள் உறுதிபடுத்தினர்; அப்பெண்ணும் நேற்று மரணடைந்தார்.
அச்சம்பவத்தில் குற்றவியல் அம்சங்கள் எதுவுமில்லை என்பது போலீசின் தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து திடீர் மரணமாக அது வகைப்படுத்தப்பட்டது.