
கோலாலம்பூர், ஆக 26 – சிலாங்கூரில் சபா பெர்ணமில் தங்கும் வசதியைக் கொண்ட ஒரு பள்ளியின் மூன்றாவது மாடியிலிருந்து மாணவன் ஒருவன் கீழே விழுந்த சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு விசாரணையை தொடங்கியுள்ளது. அதிகாலை இரண்டு மணியளவில் நடைபெற்ற அந்த சம்பவத்தில் மூளை, நுரையீரல் மற்றும் தாடையில் கடுமையாக காயம் அடைந்த அந்த மாணவன் தற்போது கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
இதனைத் தொடர்ந்து அந்த பள்ளியைச் சேர்ந்த அனைத்து வார்டன்களும் தற்காலிகமாக சிலாங்கூர் மாநில கல்வித்துறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பாட்லினா சிடேக் தெரிவித்தார். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளதால் அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர் என இன்று முகநூலில் அவர் பதிவிட்டார். விசாரணை முழுமையானதாகவும், பகடிவதை குற்றச்சாட்டுகள் , மற்றும் பள்ளியின் நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் (SOPs) உட்பட அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியிருப்பதை உறுதி செய்வதாக பட்லினா கூறினார். மேலும் அந்த மாணவன் விரைவில் குணமடைய வேண்டும் என்று தாம் பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்தார்.