புதுடெல்லி, ஏப்ரல் 29 – சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானியை போல ஆள்மாறாட்டம் செய்து, விமானியின் சீருடையில் புதுடெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் சுற்றித் திரிந்த இந்திய ஆடவன் ஒருவனை, அண்மையில் அந்நாட்டு போலீசார் கைதுச் செய்தனர்.
கைதுச் செய்யப்பட்ட ஆடவன் 24 வயது சங்கீட் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளான்.
கேட்ச் மீ இஃப் யூ கேன் (Catch Me If You Can) என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ (Leonardo DiCaprio) போல, அவன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள முயன்றதையும் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
விமானியின் சீருடையில், கழுத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அடையாள அட்டையையும் அணிந்திருந்ததால், அவனுக்கு விமானத்தின் நிர்வாக அறை வரைக்கும் செல்ல அனுமதி வழங்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது.
எனினும், அவன் வைத்திருந்த அடையாள அட்டை போலி என்பது பின்னர் விசாரணையில் தெரிய வந்தது.
ஆன்லைன் செயலி ஒன்றின் வாயிலாக அவன் அந்த போலி அடையாள அட்டையை உருவாக்கியதும், புது டெல்லியிலுள்ள, விமான உபரிப்பாகங்கள் கடை ஒன்றிலிருந்து அவன் விமானியின் சீருடையை வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் தாம் விமானியாக பணிப்புரிவதாக, அவ்வாடவன் தனது குடும்பத்தாரிடம் கூறியுள்ளதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
2020-ஆம் ஆண்டு, மும்பையிலுள்ள, கல்லூரி ஒன்றில், விமான பணியாளருக்கான படிப்பை அவன் முடித்துள்ளான்.
இந்தியாவின் வட மாநிலமான உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த அவனுக்கு எதிராக மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள வேளை ; இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது.