
சிங்கப்பூர், ஜூலை-12 – கட்டாய தேசிய சேவையைத் தவிர்க்கும் நோக்கில் போலி மலேசியக் கடப்பிதழ்களைப் பயன்படுத்தி 800-க்கும் மேற்பட்ட தடவை எல்லைத் தாண்டிய சிங்கப்பூர் ஆடவருக்கு, 8 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Low Eng Kheng எனும் அவ்வாடவர், 2006 முதல் 2011 வரை சிங்கப்பூர் சோதனைச் சாவடியைக் கடக்க மொத்தமாக 876 தடவை அப்போலிக் கடப்பிதழ்களைப் பயன்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் சிங்கப்பூர் மாவட்ட நீதிமன்றமொன்றில் அந்நாட்டு குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட 5 குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக் கொண்டார்.
2006-ஆம் ஆண்டு நோய்வாய்ப்பட்டிருந்த தனது தாயாரை சென்று காண்பதற்காக, முதன் முறையாக அடையாளம் தெரியாத ஒரு நபரிடம் 45,000 ரிங்கிட் கட்டணத்தில் Low ஒரு போலி மலேசியக் கடப்பிதழைப் பெற்றுள்ளார்.
அதில் அவருடைய முகம் பொறிக்கப்பட்டிருந்தாலும் சுயவிவரங்கள் அனைத்தும் ‘Chong Poh Yin’ எனும் இன்னோர் ஆடவருடையதாகும்.
அடுத்தடுத்த ஆண்டுகளில் அதே மாற்றுப்பெயரில் மேலும் 3 போலி கடப்பிதழ்களை தலா 10,000 ரிங்கிட் கட்டணத்தில் அவர் வாங்கியுள்ளார்.
அவற்றைப் பயன்படுத்தி, பயணிகளை ஏற்றிச் செல்லும் ஓட்டுநர் என்ற போர்வையில் அவர் சிங்கப்பூருக்கு வெளியில் போவதும் உள்ளே வருவதுமாக இருந்துள்ளார்.
இது தவிர, 2011-ஆம் ஆண்டு மார்ச் முதல் மே வரையிலான காலக்கட்டத்தில் disembarkation படிவங்களில் 59 தடவை போலிப் பெயர்கள், பிறந்தத் தேதி, பிறந்த இடம் ஆகியவற்றைத் தந்ததாக குற்றச்சாட்டில் கூறப்பட்டது.
லிஷயம் தெரிந்து 2023-ல் சிங்கப்பூர் குடிநுழைவுத் துறை விசாரணையைத் தொடங்கிய நிலையில், ஒருவழியாக கடந்தாண்டு ஆகஸ்ட் வாக்கில் Low கைதானார்.