சித்தியவான், ஜூன் 21 – பேராக், சித்தியவான், கம்போங் ஆச்சேவில், கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாதில், அதில் சிக்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.
இன்று அதிகாலை மணி 5.34 வாக்கில், அவ்விபத்து குறித்து அவசர அழைப்பு கிடைத்ததாக, பேராக் மாநில தீயணைப்பு மீட்பு துறையின் நடவடிக்கை அறை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மீட்புப் படை வீரர்கள், புரோட்டோன் சாகா FLX ரக கார் ஒன்று விபத்துக்குள்ளாகி இருப்பதை கண்டுள்ளனர்.
நால்வர் பயணித்த அக்காரிலிருந்து வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டிருந்த 24 வயது இளைஞர் ஒருவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை மருத்துவ அதிகாரிகள் பின்னர் உறுதிப்படுத்தினர்.
அதே காரில் பயணித்த 27 வயது நபர், காயம் காரணமாக சுகாதார அமைச்சின் வாகனம் வாயிலாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்ட வேளை ; எஞ்சிய இருவர், சொந்ததாகவே அவ்விடத்தை விட்டு அகன்று சென்றனர்.
அதிகாலை மணி 6.22 வாக்கில் மீட்புப் பணிகள் நிறைவடைந்தன.