சிபு, ஜூன்-19 – சரவாக், சிபு, பெலாகாவில் உள்ள Long Menjawah-வில் படகுக் கவிழ்ந்ததில் நீரில் மூழ்கிக் காணாமல் போன இருவரில் ஒருவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.
கெடா, சுங்கை பட்டாணியைச் சேர்ந்த 36 வயது பாலவிஷ்ணு பெர்மாளுவின் சடலம் ( Balavishnu Permaloo ) சம்பவ இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் செவ்வாய்க்கிழமை மதியம் ஆற்றில் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
அவரின் உடல் மேல் நடவடிக்கைக்காக போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது.
காணாமல் போன மற்றொருவரான 30 வயது ரூபன் அப்பாருவைத் ( Rhuban Apparoo ) தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தீயணைப்பு-மீட்புத் துறையோடு, பொது தற்காப்புத் துறையும் ரேலா தொண்டூழியப் படையும் தேடி மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
பக்குன் அணைக்கட்டு பராமரிப்பு நிறுவனத்தின் ஊழியர்களான அவ்விருவரும் இதர இரு சக ஊழியர்களுடன் Jeram Menjawah பகுதியைச் சுற்றிப் பார்ப்பதற்காக ஜூன் 16-ஆம் தேதி படகொன்றை வாடகைக்கு எடுத்திருந்தனர்.
Jeram Menjawah-வில் ஏற்பட்ட நீர்பெருக்கில் படகுக் கவிழ்ந்த போது அவ்விருவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
படகோட்டி உள்ளிட்ட மற்ற மூவர் அதில் உயிர் தப்பினர்.