
சிபூ, அக்டோபர்-6,
சரவாக், சிபூவில் உள்ள ஜாலான் ஓயா சாலையில் நேற்று காலை அதிர்ச்சியும் அச்சமும் கலந்த காட்சிகள் அரங்கேறி பரபரப்பை ஏற்படுத்தின.
ஒரு பெரோடுவா கெனாரி கார் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளை மோதியதுடன், பின்னர் தப்பிக்க முயன்றபோது இரு வழிச்சாலையில் பல வாகனங்களை மோசமாக இடித்துச் சென்றது.
கெனாரி முதலில் மோட்டார் சைக்கிளோட்டியை கடுமையாக மோதி, வாகனங்களுக்கு இடையே ‘அருவருப்பான’ முறையில் நுழைந்து மோதுவது வைரலான வீடியோவில் தெளிவாக தெரிகிறது.
வீடியோவைப் பார்ப்போருக்கே கோபத்தை உண்டாக்கும் அளவுக்கு கெனாரி ஓட்டுநரின் செயல் இருந்தது.
மோட்டார் சைக்கிளோடு சேர்த்து குறைந்தது 8 வாகனங்கள் அதில் சேதமடைந்துள்ளன.
அதிர்ச்சி அடைந்த சில ஓட்டுநர்கள் உடனடியாக தங்கள் வாகனங்களிலிருந்து வெளியே குதித்தனர்; சிலர் கடும் கோபத்தில் அந்த கெனாரி காரை விரட்டிக் கொண்டு ஓடினர்.
பொது மக்களின் உதவியுடன் கெனாரி வாகனம் ஒருவழியாக சுற்றி வளைக்கப்பட்டது.
அதிலிருந்த 25 வயது இளைஞர், தன்னைத் தொடர்ந்து யாரோ துரத்தி வருகிறார்கள் என்றும் அதனால் தான் பயந்து ஓடுவதாகவும் கூறிக் கொண்டார்.
சம்பவ இடம் விரைந்த போலீஸார் நிலைமையைக் கட்டுப்படுத்தினர்.
உண்மையிலேயே அவ்வாடவரை யாராவது துரத்தினார்களா அல்லது பொறுப்பில்லா ஓட்டமா என்பதை சிபூ போலீஸ் விசாரித்து வருகிறது.
இச்சம்பவத்தால், வழக்கமான காலை போக்குவரத்து ஒரு கணத்தில் பயம் மற்றும் பரபரப்பின் போர்க்களமாக மாறியது.