ஈப்போ, செப்டம்பர்-9, ஈப்போவில் வீட்டின் சிமெண்ட் தரைக்கு அடியில் பெண் குழந்தையின் சடலம் புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பேராக் போலீஸ் அனைத்துலக போலீசான INTERPOL-லின் உதவியை நாடக் கூடும்.
சந்தேக நபரான இந்தோனீசியப் பிரஜையை தேடி கண்டு பிடிக்கும் கடைசி முயற்சியாக அது இருக்குமென, மாநில போலீஸ் தலைவர் டத்தோ அசிசி மாட் அரிஸ் (Datuk Azizi Mat Aris) தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட வீட்டில் கடைசியாக வாடகைக்கு இருந்த இந்தோனீசியப் பெண், இன்னமும் மலேசியாவில் தான் இருக்கிறாரா அல்லது தாயகம் திரும்பி விட்டாரா என்பது குறித்து உறுதியாக எதுவும் தெரியவில்லை.
ஒருவேளை அவர் இந்தோனீசியா திரும்பியது உறுதியானால், அப்போது INTERPOL-லின் உதவி நாடப்படுமென டத்தோ அசிசி சொன்னார்.
ஆகஸ்ட் 28-ஆம் தேதி ஈப்போ, தாமான் ஸ்ரீ ரோக்காமில் உள்ள வீட்டின் கார் நிறுத்துமிடத்தில், சிமெண்ட் தரைக்கு அடியில் அக்குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
புதிதாக வாடகைக்கு வந்த இந்தோனீசிய நபர், வீட்டைப் புனரமைக்க சிமெண்டை தோண்டிய போது, அது அம்பலமானது.
அவருக்கு முன்பாக 400 ரிங்கிட் மாத வாடகைக்கு அவ்வீட்டில் குடியிருந்த இந்தோனீசிய மாது, ஒரு மாதத்திற்கு முன்பு தலைமறைவானது குறிப்பிடத்தக்கது.
7 மாத குறைபிரசவத்தில் பிறந்ததாக நம்பப்படும் அக்குழந்தையின் உடலில் காயங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.