சிம்பாங் ரெங்காம், மே 29 – ஜோகூர், லாயாங் மற்றும் சிம்பாங் ரெங்காம் சுற்று வட்டாரப் பகுதியிலுள்ள, சிற்றோடைகள் மற்றும் கால்வாய்களில், நேற்று முதல் ஆயிரக்கணக்கான “அரோவானா” மீன்கள் தென்படுகின்றன.
சுமார் இரண்டு கிலோகிராம் எடையில், தங்க மற்றும் வெள்ளை செதில்களை கொண்ட அந்த அலங்கார மீன்கள், அருகிலுள்ள கால்நடை குளத்திலிருந்து அடித்து வரப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
எனவே, சுற்று வட்டார மக்கள் அந்த வாய்ப்பை தவற விடாமல், வலை மற்றும் தூண்டில்களை பயன்படுத்தி அந்த மீன்களை பிடித்து வருகின்றனர்.
உள்ளுர் மக்கள் மீன்களை பிடிக்கும் காட்சி, ஒரு விழாவை போல காட்சியளிக்கிறது.
அந்த காட்சிகள் அடங்கிய காணொளி, சமூக ஊடகங்களிலும் வைரலாகியுள்ளது.
வளர்ப்பு குளத்திலிருந்து அடித்து வரப்பட்ட அந்த மீன்கள், கோத்தா திங்கியிலுள்ள, சுங்கை சாயோங் வரை காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, அந்த மீன்கள் தம்முடையது என, கம்போங் தெங்கா லாயாங் பகுதியில், வர்த்தக ரீதியாக அரோவானா மீன்களை வளர்க்கும் ங் ஆ பெள என்பவர் கூறியுள்ளார்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் வளர்த்து வந்த 15 ஆயிரத்துக்கும் அதிகமான அரோவானா மீன்கள், நேற்று அதிகாலை குளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக அடித்துச் செல்லப்பட்டதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அச்சம்பவம் தொடர்பில் அவர் போலீஸ் புகார் ஒன்றையும் செய்துள்ளார்.