
தெமர்லோ, நவம்பர்-4 – பஹாங், மெந்தகாப்பில் தொலைத்தொடர்பு நிறுவனமொன்றின் கேபிள்களைத் திருடுவதை பொது மக்கள் வீடியோவில் பதிவுச் செய்வது தெரிந்தும், அதனைப் பொருட்படுத்தாமல் திருடிச் சென்ற கும்பலின் வீடியோ வைரலாகியுள்ளது.
நேற்று அதிகாலை 2.45 மணிக்கு மெந்தகாப், தாமான் கெராமாட்டில் உள்ள வீடமைப்புப் பகுதியில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
விடியற்காலையில் வெளியே சத்தம் கேட்டதை அடுத்து வந்துப் பார்த்த வீட்டுக்காரர் ஒருவர், அங்கே சில ஆடவர்கள் கேபிள்களைத் திருடுவதை கண்டு அதிர்ச்சியுற்றார்.
அவர்களைத் திட்டிக் கொண்டே அவர் வீடியோ எடுத்த போதும், அதனைத் திருடர்கள் கண்டுகொள்ளவில்லை.
ஓர் ஆடவர் கால்வாயிலிருந்து கேபிள்களை இழுத்து காரின் பின்புறத்தில் மாட்டி விட்டு அங்கிருந்து கிளம்புவது அந்த 1 நிமிடம் 44 வினாடி வீடியோவில் தெரிகிறது.
இதையடுத்து வீடியோ எடுத்த ஆடவர் அது குறித்து போலீசில் புகார் செய்தார்.
கேபிள் திருட்டு குறித்து சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனமும் புகார் செய்திருப்பதை மெந்தகாப் போலீஸ் உறுதிப்படுத்தியது.
கேபிள் திருட்டு கும்பலின் இரு கார்களும் போலி வாகன பதிவு எண் பட்டையைப் பயன்படுத்தியிருப்பதும் கண்டறியப்பட்டது.