சிரம்பான், ஜூலை 17 – நெகிரி செம்பிலான், சிரம்பான், தாமான் பண்டார் செனாவாங்கிலுள்ள, கள்ளக்குடியேறிகள் குடியிருப்பு பகுதியில், மாநில குடிநுழைவுத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையில், 11 பேர் கைதுச் செய்யப்பட்டனர்.
2009-ஆம் ஆண்டு, குடிநுழைவுத் துறை சோதனை தரவுகள் அடிப்படையில், 2,700 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்திருக்கும் அந்த குடியிருப்பு பகுதி, சுமார் 15 ஆண்டுகளாக இருப்பதாக நம்பப்படுகிறது.
அந்த குடியிருப்பை சுற்றி ஜிங் (zink) வேலி அமைக்கப்பட்டுள்ளதோடு, உள்ளே நுழைய தடை விதிக்கும் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
உளவு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கை வாயிலாக, இன்று காலை அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 11 கள்ளக்குடியேறிகள் கைதுச் செய்யப்பட்டதை, நெகிரி செம்பிலான் குடிநுழைவுத் துறை இயக்குனர் கென்னித் டான் ஐ கியாங் (Kennith Tan Ai Kiang) உறுதிப்படுத்தினார்.
முறையான ஆவணம் எதுவும் இன்றி இருந்த அவர்களில் எழுவர் இந்தோனேசியர்கள். நால்வர் வங்காளதேசிகள் ஆவர்.
உணவு உட்கொள்ளும் மண்டபத்துடன், தங்கும் விடுதியை போல காணப்பட்ட அந்த சட்டவிரோத குடியிருப்பு அமைந்துள்ள நிலத்தின் உரிமையாளர் குறித்த விவரங்கள் திட்டப்பட்டு வரும் வேளை ; அந்த சட்டவிரோத குடியிருப்பை நிர்வகித்து வந்ததாக நம்பப்படும் நபரிடமிருந்து வாக்குமூலம் பெறப்படுமெனவும், கென்னித் சொன்னார்.