கோலாலம்பூர், ஜூலை 25 – சிறுவர்களுக்கான MyKid விண்ணப்பத்தை, வரும் திங்கட்கிழமை முதல் அக்டோபர் மாதம் 31-ஆம் தேதி வரை, தேசிய பதிவுத் துறை மீண்டும் திறக்கவுள்ளது.
முன்னதாக, MyKid அட்டைகளில் இருக்கும் சில்லு பற்றாக்குறை காரணமாக, அதன் விண்ணப்பம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக, தேசிய பதிவுத் துறை ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.
ஏற்கனவே MyKid அட்டைக்கு விண்ணப்பம் செய்து அதற்கான ரசீதை வைத்திருப்பவர்கள், அது பெற்றுக் கொள்ள தயார் நிலையில் உள்ளதா என்ற விவரத்தை, www.jpn.gov.my எனும் தேசிய பதிவுத் துறையின் அதிகாரப்பூர்வ இணைய அகப்பக்கத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம்.
MyKid அட்டைக்கு பின்னர் செய்தவர்கள், மூன்று மாதங்களில் அதனை சரிபார்த்துக் கொள்ள வேண்டும், அதன் பின்னர் நிலுவையில் இருக்கும் விண்ணப்பங்கள் இரத்துச் செய்யப்படும்.
அதனால், விண்ணப்பதாரர்கள் புதிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க நேரிடலாம் என, தேசிய பதிவுத் துறை கூறியுள்ளது.
அதே சமயம், வீண் செலவுகளையும், சிரமத்தையும் தவிர்க்க, தயார் நிலையில் இருக்கும் MyKid அட்டைகளை, விண்ணதாரர்கள் முறையாக பெற்றுக் கொள்ள வேண்டுமெனவும் அது வலியுறுத்தியுள்ளது.