சைபர் ஜெயா, ஏப்ரல்-1, சிறுநீர் பை அகற்றப்படும் போது ‘கடும் ரத்தப் போக்கு’ ஏற்பட்டதாகக் கூறிய நோயாளியிடம் சைபர் ஜெயா மருத்துவமனை மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளது.
சிகிச்சையளித்த மருத்துவரும் தாதியர்களும், நோயாளியையும் அவரின் குடும்பத்தாரையும் நேரில் சந்தித்து நிலைமையை விளக்கியதோடு, ஏற்பட்ட அசௌகரியத்துக்கு மன்னிப்புக் கோரியதாக, மருத்துவமனையின் இயக்குனர் அறிக்கையொன்றில் கூறினார்.
மார்ச் 28-ஆம் தேதி அச்சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
டெங்கிக் காய்ச்சலால் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த அந்நோயாளி, தனது pampers ரத்த வெள்ளத்தில் கிடக்கும் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் முன்னதாக பதிவிட்டிருந்தார்.
தனது ஆணுறுப்பில் பொருத்தப்பட்டிருந்த சிறுநீர் பையை, கடும் வலிக்கும் மத்தியில் மருத்துவப் பணியாளர்கள் விருட்டென பிடித்து இழுத்ததில், அவ்விடம் புண்ணாகி கடும் ரத்தப் போக்கு ஏற்பட்டதாக அந்த நோயாளி குற்றம் சாட்டியிருந்தார்.
அது குறித்து விளக்கிய சைபர் ஜெயா மருத்துவமனையின் இயக்குனர், சம்பவத்தின் போது சற்று சிரமத்திற்கு மத்தியில் தான் அவரின் சிறுநீர் பை அகற்றப்பட்டது; என்றாலும் அதன் போது ரத்தப் போக்கு எதுவும் ஏற்படவில்லை. ஆனால் ஒரு மணி நேரம் கழித்து கழிவறைக்குச் சென்ற போது ரத்தக் கசிவு ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
உடனடியாக அவருக்கு உரிய கண்காணிப்பு வழங்கப்பட்டு, ரத்த பரிசோதனையும் செய்யப்பட்டதில் அவருக்கு ரத்த இழப்பு எதுவும் ஏற்படவில்லை என்பது உறுதிச் செய்யப்பட்டது என்றார்.
நோயாளியின் உடல்நிலையும் சீராக இருக்கிறது; எனவே வாரக் கடைசியில் அவர் வீடு திரும்ப அனுமதிக்கப்படலாம் என மருத்துவமனை கோடி காட்டியது.