
கோலாலம்பூர், – ஜூன்-15 – மலேசிய இணைய நெறிமுறை அதாவது IP முகவரிகள், சிறார்களை உள்ளடக்கியவை உட்பட, ஆபாசத் தளங்களை வலம் வருவது அதிகரித்து வருகிறது.
கடந்தாண்டு வெளியிடப்பட்ட போலீஸ் தரவுகளின்படி, 100,000க்கும் மேற்பட்ட மலேசிய IP முகவரிகள் குழந்தைகள் ஆபாச வலைத்தளங்களை அணுகியுள்ளதாக, குற்றவியல் ஆய்வாளர் ஷாகுல் ஹமீட் அப்துல் ரஹீம் கவலைத் தெரிவித்தார்.
2015-ஆம் ஆண்டில் குழந்தைகள் ஆபாச வலைத்தளங்களை அணுகியதாகக் கண்டறியப்பட்ட 17,000 மலேசிய IP முகவரிகளுடன் ஒப்பிடுகையில், இது மிகப் பெரிய அதிகரிப்பாகும். தவிர, 13 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் சுமார் 50 விழுக்காட்டினர் பல ஆண்டுகளுக்கு முன்பு WeChat செயலி மூலம் குற்றவாளிகளுடன் தொடர்பு கொண்டிருந்தனர் என்றார் அவர்.
எனவே child grooming அதாவது வயது வந்த ஒருவர், குழந்தைகளைப் பாலியல் ரீதியாக சீண்டும் நோக்கத்தோடு உறவை வளர்க்கும் ‘கலாச்சாரத்தை’ இனியும் ஒரு சிறிய பிரச்னையாகக் கருதாமல் கடுமையாக அணுக வேண்டும் எனவும் சாகுல் ஹமீட் சொன்னார்.
பதிவுச் செய்யப்பட்ட IP முகவரிகளை மட்டுமே போலீஸ் தரவுகள் காட்டுவதால், உண்மை எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாமென நம்புவதாக அவர் கூறினார்.
உண்மையான IP முகவரிகளைத் தவிர்ப்பதற்கு, VPN எனப்படும் மெய்நிகர் தனியார் கட்டமைப்பு பரவலாகப் பயன்படுத்தப்படுலதையும் அவர் சுட்டிக் காட்டினார்.