சிலாங்கூரில் சர்ச்சை: ‘ஹலால்-ஹலால் அல்லாத’ கழிவு மேலாண்மை வழிகாட்டுதல்களை மறுஆய்வு செய்ய மாநில அரசு முடிவு

ஷா ஆலாம், ஜூன்-21,
சிலாங்கூர் மாநில அரசும், PLANMalaysia நிறுவனமும் இணைந்து, வணிக வளாகங்களுக்கான கழிவு மேலாண்மை வழிகாட்டுதல்களை மறுஆய்வு செய்யவுள்ளன.
‘ஹலால் மற்றும் ஹலால் அல்லாத’ கரிமக் கழிவுகளைப் பிரிப்பது தொடர்பான விதிகளில் ஏற்பட்டுள்ள குழப்பத்தைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்துப் பேசிய ஆட்சிக் குழு உறுப்பினர் Ng Suee Lim, இந்த விதி புதிய கொள்கை அல்ல என்றும், 2010-ஆம் ஆண்டு முதல் அமுலில் உள்ள ஒன்றுதான் என்றும் விளக்கமளித்தார்.
மேலும், இப்பாகுபாடு சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் ஹைப்பர் மார்க்கெட்டுகளின் உட்புறக் கழிவுச் சேகரிப்புப் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், பொது இடங்களில் உள்ள குப்பைத் தொட்டிகளுக்கு அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
முன்னதாக, பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் Lee Chean Chung, இந்த விதியினால் வணிக வளாகங்களுக்குக் கூடுதல் செயல்பாட்டுச் செலவுகள் ஏற்படலாம் என கவலை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், தற்போதைய வழிகாட்டுதல்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட வாய்ப்புள்ளதை ஒப்புக்கொண்ட மாநில அரசு, தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் நகராட்சியின் ஆலோசனையோடு இதனை மேம்படுத்தவுள்ளது.
இம்மாற்றங்கள், கூட்டரசு கொள்கைகளுக்கு ஏற்பவும், வணிகத் துறையினருக்குச் சுமையற்ற வகையிலும் அமைவதை சிலாங்கூர் அரசு உறுதி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



