சிலாங்கூர், செப்டம்பர் 6 – சிலாங்கூர் உரிமைக் கட்சியின் தலைவர் குணசேகரன் குப்பனும், துணைத்தலைவர் சுந்தர்ராஜூ குப்புசாமியும், நேற்று வடக்கு கிள்ளான் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் iSeed மற்றும் SITHAM திட்டங்களின் செயல்திறனைக் கேள்விக்குள்ளாக்கிய டிக் டோக் பதிவுகளை தொடர்ந்து, சிறு குற்றச் சட்டம் 1955 மற்றும் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் 1988-யின் கீழ், இருவரும் கைது செய்யப்பட்டனர்.
கடந்த ஒரு வருடமாக, சிலாங்கூர் மடானி அரசாங்கத்தை குணசேகரனின் தலைமையில் செயல்படும் சிலாங்கூர் உரிமை கட்சி மிகவும் விமர்சித்துள்ளது.
கால்நடை இடப்பெயர்வு, ஏழைகளுக்கு வீடு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை அவர் எடுத்துரைத்துள்ளார்.
குணசேகரனின் விமர்சனங்கள் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தை குறிப்பாக Exco உறுப்பினர்களை எரிச்சலடையச் செய்துள்ள நிலையில், காவல்துறைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குணசேகரன் மற்றும் சுந்தர்ராஜுவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் அல்லது அவர்கள் செய்த குற்றங்கள் தெரிவிக்கப்பட வேண்டும் என அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
அரசியல் சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் கடந்தாலும், சமூக, பொருளாதார மாற்றம் இருந்தாலும், காவல் துறை முன்பு இருந்ததைப் போலவே உள்ளதாக உரிமை கட்சி சாடியுள்ளது.
காவல்துறை அன்றைய அரசாங்கத்தின் கட்டளைப்படி செயல்படாமல், சுதந்திரமாகவும் நடுநிலையாகவும் செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.