
ஷா ஆலாம், நவம்பர்-28, சிலாங்கூர் – கோலாலம்பூர் இடையிலான எல்லை மறு நிர்ணயம் ஈராண்டுகளில் இறுதிச் செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி (Datuk Seri Amirudin Shari) அவ்வாறு கூறியுள்ளார்.
தற்போது, ஆய்வு மற்றும் படமிடல் (mapping) துறை, விரிவான அளவீட்டை மேற்கொண்டு வருகிறது.
அது முழுமைப் பெற்றதும் எல்லைகளை அமைக்கும் ஒப்பந்தம் தாயாராகுமென அமிருடின் சொன்னார்.
எது எப்படி இருப்பினும், எல்லைகளை தெளிவாக வரையறுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
சமையலறைகள், வராண்டாக்கள் அல்லது குறிப்பிட்ட வளாகங்கள் நடுவில் எல்லைக் கோடுகள் வருவதைத் தவிர்க்க விரும்புகிறோம் என்றார் அவர்.
டோல் கட்டண வசூலிப்பு, ஊராட்சித் துறையின் அமுலாக்க நடவடிக்கைகள், இரு மாநிலங்களுக்கும் இடையிலான வசதி பயன்பாட்டு பராமரிப்பு போன்றவற்றைச் சீராக்க, இந்த எல்லை மறு நிர்ணயம் அவசியமென மந்திரி பெசார் சொன்னார்.
இவ்வேளையில், கோலாலம்பூரை மீண்டும் தனது மாவட்டமாக உரிமைக் கோரும் எண்ணம் எதுவும் சிலாங்கூருக்கு இல்லையென அவர் தெளிவுப்படுத்தினார்.
கோலாலம்பூரை, கூட்டரசு பிரதேசமாக மத்திய அரசாங்கத்திற்கு தாரை வார்த்த 1974-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை, சிலாங்கூர் தொடர்ந்து மதித்து வருமென சட்டமன்றத்தில் பேசிய போது அமிருடின் சொன்னார்.