கோலாலம்பூர், ஏப் 11- அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் சிலாங்கூர் கோலா குபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் வெற்றி பெறுவதாக இருந்தால் குறைந்த பட்சம் இந்தியர்களின் 60 விழுக்காடு வாக்குகளை பெறவேண்டிய அவசியம் DAP க்கு இருப்பதாக அக்கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய வாக்காளர்களின் வாக்குகள் எந்த வேட்பாளரின் வெற்றிக்கும் உதவ முடியும் என தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பாத சிலாங்கூர் DAP சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருக்கிறார் . கோலா குபு பாருவை தற்காத்துக் கொள்வதற்கு குறைந்தது 60 விழுக்காடு இந்தியர்களின் வாக்குகள் எங்களுக்கு தேவைப்படுகிறது. இந்த தொகுதியில் 18 விழுக்காடு வாக்காளர்கள் இந்தியர்களாக இருப்பதால் அவர்கள்தான் King Makers அல்லது வெற்றி தோல்வியை நிர்ணயிப்பவர்களாக இருப்பார்கள் என அவர் தெரிவித்தார். சீனர்களின் வாக்குகளை DAP தற்காத்துக் கொள்ளும். மலாய்க்காரர்களின் வாக்குகள் பிளவுபடலாம். இந்த சூழ்நிலையில் இந்தியர்களின் வாக்குகள்தான் கோலா குபு பாரு தொகுதியில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் என அவர் கூறினார்.
இந்திய சமூகத்தின் ஆதரவு கொஞ்சம் கொஞ்சமாக எதிர்க்கட்சியான பெரிக்காத்தான் நேசனல் பக்கம் திரும்புவதை கட்சி உணர்ந்துள்ளதாக அந்த சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார். மித்ராவை கையாண்ட விவகாரம் மற்றும் அமைச்சரவையில் தமிழ் பேசக்கூடிய இந்திய பிரதிநிதி இல்லாததும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். இந்தியர்கள் தற்போது கூட்டரசு நிலையில் அரசாங்கத்தின் மீது மகிழ்ச்சியாக இல்லை. இதனால் இந்திய சமூகத்தின் அதிருப்தி வாக்குகள் பெரிக்காத்தான் நேசனலுக்கு திரும்பக்கூடும் என அந்த சட்டமன்ற உறுப்பினர் கோடிகாட்டினார். இதனிடையே இந்த இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் குறித்து கட்சி இன்னும் முடிவு செய்யவில்லையென சிலாங்கூரின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.