கோலாலம்பூர், மே 15 – சிலாங்கூர் மாநில சிலம்பக் கழகத்தின், விளையாட்டு துறைக்கான முதல் அறிவியல் பயிற்சி பட்டறை மிகவும் சிறப்பாக நடந்தேறியது.
இம்மாதம் ஒன்பதாம் தேதி தொடங்கி 12-ஆம் தேதி வரை, கோலாலம்பூர், புக்கிட் கியாரா, ராக்கான் மூடா கட்டடத்திலுள்ள, பயிற்சி மண்டபத்தில் இந்த பட்டறை நடைபெற்றது.
சிலாங்கூர் சிலம்பக் கழக வரலாற்றில், சிலம்ப ஆசிரியர்கள் மட்டும் பங்கெடுத்த முதல் விளையாட்டு துறைக்கான அறிவியல் பயிற்சி பட்டறையாக இது அமைந்திருந்ததாக மாநில சிலம்பக் கழகத்தின் தலைவர் சி.சரவணன் தெரிவித்தார்.
அதோடு, இதுவரை இதுபோன்ற பட்டறைகள் நடத்தப்படும் போதெல்லாம் வெறும் நான்கு அல்லது ஐந்து சிலம்ப ஆசிரியர்கள் மட்டுமே பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், இம்முறை முதல் முறையாக 60 சிலம்ப ஆசிரியர்,பயிற்சியாளர்கள் பங்கெடுக்க வாய்ப்பு கிட்டியது.
அதனால் இப்பட்டறை, பத்தாயிரம் சிலம்ப மாணவர்களை உருவாக்கும் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் இலக்கை நனவாக்க பெரும் பங்களிப்பை வழங்கும் என சரவணன் நம்பிக்கை தெரிவித்தார்.
தேசிய விளையாட்டு மன்றத்தின், தேசிய பயிற்சியாளர் கல்வி கழக்கத்தை சேர்ந்த பயிற்சியாளர்களால் வழிநடத்தப்பட்ட இந்த பட்டறையில், விளையாட்டு துறை சார்ந்த உடற்கூறு, உணவு முறை, பயிற்சி திறன், மருத்துவம் ,உளவியல் ஆலோசனைகள், உடல் ஆரோக்கியம், இயக்கவியல், ஊக்கமருந்து எதிர்ப்பு, விளையாட்டு கொள்கைகள், விளையாட்டு வரலாறு ஆகியவை குறித்தும் முழுமையாக விளக்கமளிக்கப்பட்டது.