
புத்ரா ஜெயா, ஜூலை 24 – ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான எந்தவொரு நடவடிக்கையும் இறந்த நபர்களைத் தண்டிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, மாறாக சட்டவிரோதமாக தவறாகப் பயன்படுத்தப்பட்ட நாட்டின் சொத்துக்களை மீட்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதை அரசாங்கம் வலியுறுத்துகிறது.
மரணம் அடைந்தவர்களின் வயது அல்லது அந்தஸ்தை அடிப்படையாகக் கொண்டு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அனுதாபத்தைத் தூண்ட முயற்சிப்பவர்கள் இருந்தாலும், சட்டவிரோதமாக சேர்த்த நாட்டின் செல்வத்தை மீட்டெடுப்பதே அரசாங்கத்தின் தற்போதைய முன்னுரிமையாகும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
தெளிவான ,நியாயமின்றி அளவுக்கு அதிகான செல்வத்தை குவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட சில நபர்களைப் பாதுகாக்க அதிக விருப்பம் கொண்டதாகக் கருதப்பட்ட எதிர்க்கட்சியின் செயல்களையும் அன்வார் விமர்சித்தார்.
பில்லியன் கணக்கான செல்வத்தை குவித்தவர்களை பாதுகாப்பதற்கு எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை பயன்படுத்துகின்றன என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். இறந்தவர்களைத் தண்டிக்க நாங்கள் விரும்பவில்லை. சட்டவிரோதமாக எடுத்துச் சென்ற பணத்தை நாங்கள் திரும்பப் பெற விரும்புகிறோம் என இன்று புத்ராஜெயாவில் நிதி அமைச்சின் மாதாந்திர கூட்டத்தில் உரையாற்றியபோது அன்வார் வலியுறுத்தினார்.
இதனிடையே பத்து பூத்தே பிரச்னையில் தனது குற்றத்தை நிருபிக்க நீதிமன்றத்தில் அரசாங்கம் வழக்குத் தொடர வேண்டும் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட் விடுத்திருந்த அழைப்பையும் அன்வார் நிராகரித்தார்.