சிலிம் ரிவர், ஆகஸ்ட் -24 – Sungai Slim ஆற்றில் நேற்று ஏற்பட்ட நீர் பெருக்கின் போது அடித்த வரப்பட்ட மரக்கட்டைகளும், மரங்களும் சட்டவிரோத வெட்டுமர தொழில்களால் வந்தவை அல்ல.
பேராக் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ சாரானி மொஹமட் (Datuk Seri Saarani Mohamad) அதனை உறுதிபடுத்தியுள்ளார்.
மாறாக, யாராலோ கைவிடப்பட்டு, அடைமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அவை அடித்து வரப்பட்டிருக்கலாமென்றார் அவர்.
அவற்றை அகற்றும் பணிகளில் பொதுப்பணித் துறை (JKR) இன்று களமிறங்கும்.
அவற்றை விரைந்து அப்புறப்படுத்த வேண்டியுள்ளது; இல்லையென்றால் இன்று மாலை மீண்டும் மழைப் பெய்து அவை வேறெங்காவது அடித்துச் செல்லப்பட்டு பாலங்களில் சிக்கிக் கொள்ளக் கூடும் என மந்திரி பெசார் சொன்னார்.
முன்னதாக, Battle of Slim என்ற பட்டப் பெயருக்குச் சொந்தமான Sungai Slim-மின் பழையப் பாலம் நேற்றிரவு இடிந்து விழுந்தது.
வெள்ள நீரில் அடித்த வரப்பட்ட மரக்கட்டைகளின் அழுத்தம் தாங்காமலேயே பாலம் இடிந்து விழுந்ததாக சாரானியை மேற்கோள்காட்டி செய்திகளும் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் பயணிகளின் பாதுகாப்புக் கருதி அப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.