பெய்ஜிங், ஜூன்-9 – சீனாவில் உள்ள ஆசியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சியான Yun Tai நீர்வீழ்ச்சியில், இயற்கையாக அல்லாமல் தண்ணீர் குழாயில் இருந்து நீர் கொட்டுவது அம்பலமாகியுள்ளது.
நீர் வீழ்ச்சியின் உச்சியில் பொருத்தப்பட்டுள்ள தண்ணீர் குழாய் வழியாக நீர் கீழே பீய்ச்சி அடிப்பது மலையேறி ஒருவரின் கண்ணில் பட்டது.
அதனை அவர் வீடியோவில் பதிவுச் செய்து வெளியிட்டுள்ளார்.
இது சுற்றுப் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
எனினும் இது குறித்து அலட்டிக் கொள்ளாத சம்பந்தப்பட்ட சுற்றுலா தல நிர்வாகம், வெயில் காலத்தில் வரும் சுற்றுப் பயணிகள் ஏமாறக் கூடாது என்பதற்காக செய்யப்பட்ட ஏற்பாடே அதுவென விளக்கமளித்துள்ளது.
சுற்றுப் பயணிகள் ஏமாறிச் செல்லக் கூடாது என்ற நோக்கம் பாராட்டுக்குரியதே; என்றாலும் எதையும் சொல்லி விட்டு செய்யுங்களேன் என நெட்டிசன்கள் கருத்துக் கூறி வருகின்றனர்.
பேசாமல் ‘செயற்கை நீர் வீழ்ச்சி’ என அறிவித்திருக்கலாமே எனவும் அவர்கள் வாதிடுகின்றனர்.
Made In China நகைச்சுவையுடன் தொடர்புப் படுத்திப் பேசிய நெட்டிசன் ஒருவர், ஆக Jackie Chan-னைத் தவிர சீனாவில் மற்ற எல்லாமே ‘செயற்கை’ தானா? என்ற கருத்துத் தெரிவித்திருப்பது சிரிப்பை வரவழைத்து அதிக கவனத்தைப் பெற்றிருக்கிறது.