பெய்ஜிங், மே 8 – சீனாவில், ரோபோ டாக்சிகளை அறிமுகப்படுத்தும் பரிந்துரையை டெஸ்லா நிறுவனம் முன்வைத்துள்ளதாக, பெயர் குறிப்பிடப்படாத ஆதாரங்களை மேற்கோள் காட்டி, உள்நாட்டு சைனா டெய்லி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
டெஸ்லாவின் உள்நாட்டு பரிசோதனை மற்றும் ரோபோ டாக்சிஸின் சோதனை ஓட்டங்களை சீனா ஆதரிக்கலாம், எனினும், முழு FSD எனப்படும் சுய-ஓட்டுநர் மென்பொருளை சீனாவில் முழுமையாக செயல்படுத்த அல்லது அறிமுகப்படுத்த இன்னும் எந்த ஒரு ஒப்புதலும் வழங்கப்படவில்லை என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த செய்தி தொடர்பில், டெஸ்லா இன்னும் கருத்துரைக்கவில்லை.
FSD என்பது தன்னியக்க மென்பொருளின் அதிநவீன பதிப்பாகும். அது 2020-ஆம் ஆண்டு வாக்கில் வெளியிடப்பட்டது. சுய-பார்க்கிங், ஆட்டோ லேன் மாற்றங்கள் மற்றும் போக்குவரத்து வழிகாட்டி ஆகியவை அதன் முக்கிய அம்சங்கள் ஆகும்.
டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் கடந்த மாத இறுதியில் பெய்ஜிங்கிற்கு மேற்கொண்ட பயணத்தையும், அங்கு FSD-யை அறிமுகப்படுத்த அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் தொடந்து சைனா டெய்லி அந்த செய்தியை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.