சுங்கை பட்டாணி, மே-29, கெடா, சுங்கை பட்டாணியில் கடும் மழையின் போது வீட்டின் முன்புறம் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த ஆடவர், மின்னல் தாக்கி உயிரிழந்தார்.
Sungai Layar, Kampung Baru Pulau Tiga-வில் திங்கட்கிழமை இரவு 9.45 மணிக்கு நிகழ்ந்த அச்சம்பவத்தில் உயிரிழந்தவர், 31 வயது Mohammad Shahrim Sheh Ali என தெரிவிக்கப்பட்டது
கிரேன் ஓட்டுநரான கணவர் வேலை அசதியில் தூங்குவதாக நினைத்து அவரை எழுப்பாமல் விட்ட மனைவி, அவர் சுயநினைவில்லாமல் கிடப்பதை இரவு 10 மணிக்கு மேல் தான் கவனித்திருக்கிறார்.
பதறிப்போன குடும்பத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்ற வேளை, வரும் வழியிலேயே அவரின் உயிர் பிரிந்து விட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
சம்பவத்தின் போது அவ்வாடவர் ஆரோக்கியமாக இருந்ததாகவும், அவருக்கு நாட்பட்ட நோய் எதுவும் இல்லை என்றும் விசாரணையில் கண்டறியப்பட்டது.
அவர் படுத்திருந்த தொட்டி தொங்கும் கட்டையில் தீப்பற்றிய தடயம் இருந்ததோடு, அருகில் மின்சார இணைப்புக் கம்பியும் துண்டாகிக் கிடந்தது.
அதோடு அவரின் உடலிலும் தீப்புண் காயங்கள் கண்டறிப்பட்டதால், மின்னல் தாக்கியே அவர் உயிரிழந்திருக்கலாம் என போலீஸ் நம்புகிறது.
இருந்தாலும் மரணத்திற்கான உண்மைக் காரணத்தைக் கண்டறிய ஏதுவாக, Sultanah Bahiyah மருத்துவமனைக்கு சவப்பரிசோதனைக்காக அவரது உடல் அனுப்பப்பட்டுள்ளது.