சுங்கை பாக்காப், ஜூலை-5 – நீண்ட காலமாக கிடப்பிலுள்ள பினாங்கு சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளியைக் கட்டி முடிக்கும் கடப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.
அப்பகுதி வாழ் மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு, கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் ( Fadhlina Sidek) அந்த உத்தரவாதத்தை வழங்கினார்.
பள்ளி நிலம், கடன் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தீர்க்கப்பட வேண்டியுள்ளன; அவற்றைத் தீர்க்கும் பணிகளும் இறுதிக் கட்டத்தில் இருக்கின்றன.
அது அரசாங்கத்தின் பொறுப்பு; எனவே சொல்லியபடி சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி கட்டி முடிக்கப்படுமென்றார் அவர்.
நிபோங் தெபால் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், அப்பள்ளியின் கட்டுமானத்துக்கு தமது பங்குக்கு 50,000 ரிங்கிட் நிதியை வழங்கியிருப்பதாகவும் ஃபாட்லீனா தெரிவித்தார்.
சுங்கைப் பாக்காப் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் அவ்வாறு சொன்னார்.
எனவே சிலர் கூறுவது போல், சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி விவகாரத்தை மனதில் வைத்து இந்திய வாக்காளர்கள் இடைத்தேர்தலில் வாக்களிக்க வர மாட்டார்கள் என்ற நிலை ஏற்படாது என அமைச்சர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
தேர்தலை அவர்கள் புறக்கணிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகத் தமக்குத் தெரியவில்லை என்றார் அவர்.
சுங்கைப் பாக்காப் சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து அத்தமிழ்ப்பள்ளி விவகாரம் பிரச்சாரப் பொருளாகியுள்ளது.
குறிப்பாக உரிமைக் கட்சியின் இடைக்காலத் தலைவர் பேராசிரியர் டாக்டர் பி.ராமசாமிக்கும் DAP-யைச் சேர்ந்த ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயருக்கும் இடையில் தொடர் வாக்குவாதம் நீடிக்கின்றது.