பேராக், ஜூலை 6 – ஈப்போவில் அதிகமான இந்திய மாணவர்கள் பயின்று வரும் சுங்கை பாரி ஆண்கள் இடைநிலைப்பள்ளியின் விளையாட்டுப் போட்டி இவ்வாண்டு முதல் முறையாக பேராக் விளையாட்டு அரங்கில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இப்போட்டி விளையாட்டினைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் டத்தோ ஸ்ரீ ஏ.கே.எஸ் சக்திவேல் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
கடந்த ஜூன், 8ஆம் தேதி நடைபெற்ற இவ்விளையாட்டுப் போட்டியில் விரைவோட்டம், ஓட்டப்பந்தயம், கயிறு இழுத்தல், பெற்றோர்களுக்கான விளையாட்டுகள் என பல போட்டிகள் நடைந்தேறின.
ஆசிரியர் மாணவர்களுக்கு மட்டுமின்றி பெற்றோர்களுக்கு மத்தியிலும் விளையாட்டு வழி நல்லிணக்கத்தை மேம்படுத்துவதும், விளையாட்டின் மேல் கொண்ட ஆர்வத்தை ஊக்குவிக்கும் நோக்கிலும், இப்போட்டி விளையாட்டு ஏற்பாடுச் செய்யப்பட்டதாக ஆசிரியர் யோகேஸ்வரன் முனியாண்டி தெரிவித்தார்.
சுங்கை பாரி விளையாட்டுப் போட்டியில் நீலம் இல்லம் முதல் இடத்தில் வாகை சூடியது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், இல்லங்களுக்கும் பரிசுகள் பதக்கங்கள் பள்ளியின் தலைமையாசிரியர் அஹ்மத் ரெஸாதின் பின் ஹுசைன் எடுத்து வழங்கினார்.