செலாயாங், செப்டம்பர் -14, சிலாங்கூர், சுங்கை பூலோ, புக்கிட் ரஹ்மான் புத்ராவில் இழுத்துக் கட்டப்பட்ட தனது வீட்டின் முன்பகுதி இடிக்கப்பட்டது குறித்து, பெண்ணொருவர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
கட்டுமானம் இடிக்கப்படுவதை ஒத்தி வைக்க நீதிமன்ற ஆணைப் பெறப்பட்டிருந்தும், செலாயாங் நகராண்மைக் கழகம் (MPS) அதனை இடித்து விட்டதாக டிக் டோக் பதிவில் அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
காரணம் கேட்டால், அண்டை வீட்டார் புகாரளித்திருப்பதாக MPS கூறுகிறது.
எங்கள் விளக்கத்தைக் கேட்க அவர்கள் தயாராக இல்லை; இடித்து தரைமட்டமாக்கி விட்டார்கள் என அப்பெண் கூறிக் கொண்டார்.
இதையடுத்து MPS அதிகாரிகளின் அந்நடவடிக்கைக்கு எதிராக அவர் போலீசில் புகார் செய்துள்ளார்.
பால்கனி பகுதியை இழுத்துக் கட்டியுள்ளோம்; வேலி சுவரை மாற்றினோம். அவ்வளவுதான்.
இடப்பக்க அண்டை வீட்டுக்காரர் அதற்கு ஒப்புக் கொண்டு விட்டார்; வலப்புறம் இருந்தவரும் முதலில் ஒப்புக் கொண்டு கையெழுத்தெல்லாம் போட்டு விட்டு கடைசியில் மனம்மாறி புகார் செய்து விட்டதாக அப்பெண் குற்றம் சாட்டினார்.
இவ்வேளையில், அனுமதியின்றி கட்டுமானம் எழுப்பியக் குற்றத்தின் அடிப்படையிலேயே அந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக MPS விளக்கம் அளித்துள்ளது.