அலோர் காஜா, ஜூன்-29 – மலாக்கா அலோர் காஜாவில் லாரியின் பின்னால் மாட்டிக் கொண்டிருந்தது பிளாஸ்டிக் பை என நினைத்து தொட்டுப் பார்த்த ஓட்டுநர், அது மலைப்பாம்பு என்பதை அறிந்து ஒரு கணம் கலகலத்துப் போனார்.
கழிவறைக்குச் செல்வதற்காக சிம்பாங் அம்பாட் டோல் சாவடியில் லாரியை நிறுத்திய போது, 35 வயது மொஹமட் சுக்ரி மொன்டி (Mohd Sukri Mondi) அந்த பரபரப்பான நிமிடங்களை எதிர்கொண்டார்.
ஏதோ கறுப்பு நிற பிளாஸ்டிக் பை தான் லாரியின் பின்னால் ஒட்டிக் கொண்டிருப்பதாக நினைத்து, வீசுவதற்காக அதைத் தொட்ட போது, மலைப்பாம்பு சீறியது.
ஒருகணம் அதிர்ந்துப் போன சுக்ரி, உடனடியாக மலேசியப் பொதுத் தற்காப்புத் துறையைத் (APM) தொடர்புக் கொண்டு உதவிக் கேட்டுள்ளார்.
இதையடுத்து சம்பவ இடம் விரைந்த அலோர் காஜா APM வீரர்கள், 2 மீட்டர் நீளமும் 1 கிலோ கிராம் எடையும் கொண்ட அந்த பாத்திக் (Batik) வகை மலைப்பாம்பைப் பிடித்துச் சென்றனர்.
இதே கிராமமாக இருந்திருந்தால் கையில் கிடைத்த கட்டையைக் கொண்டு நானே பாம்பை விரட்டியிருப்பேன்; ஆனால் டோல் சாவடி என்பதால் வேறு வழியின்றி APM-மைக் கூப்பிட்டதாக சுக்ரி கூறினார்.
வரும் வழியில் சிலாங்கூர், சுபாங்கில் ஆற்றோரமாக லாரியை நிறுத்திய போது மலைப்பாம்பு லாரியில் ஏறியிருக்கலாம் என்றார் அவர்.