ஷா ஆலாம், ஜூன்-5 – இங்கிலாந்து சுற்றுப் பயணிகளிடம் மலேசியா பற்றியும் இஸ்லாம் குறித்தும் தவறாகப் பேசிய e-hailing ஓட்டுநர் நெட்டிசன்களின் கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார்.
இந்நாட்டில் குறிப்பிட்ட மதத்தின் விதிமுறைகளைப் பின்பற்ற மற்ற சமயத்தாரும் கட்டாயப்படுத்தப்படுவதாகவும், இங்கு கேளிக்கை எதுவும் இல்லை; காட்டில் வசிப்பது போல் உள்ளது என்றும் அவர் சகட்டுமேனிக்குப் பேசியுள்ளார்.
“அவர்கள் குடிப்பதில்லை என்பதற்காக மதுபானத்தை தடை செய்வது நியாயமா?” என்றெல்லாம் அவ்வாடவர் பேசி வைத்துள்ளார்.
அவர் பேசியதை அவ்விரு சுற்றுப்பயணிகளும் கைப்பேசியில் பதிவுச் செய்த வீடியோவே தற்போது வைரலாகியுள்ளது.
அந்த ஓட்டுநரின் பேச்சு 3R எனப்படும் இனம்-மதம்-ஆட்சியாளர்கள் ஆகிய அம்சங்களைத் தொட்டிருப்பதால், அவர் மீது போலீஸ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரும்பாலான X தள பயனர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அதோடு அவரின் குடியுரிமை ரத்துச் செய்யப்பட்டு, வாகனமோட்டும் உரிமமும் மீட்டுக் கொள்ளப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மலேசியா வருபவர்களிடம் நாட்டைப் பற்றி புகழா விட்டாலும் பரவாயில்லை, இப்படி இகழ்ந்து பேசுவது ஏற்றுக் கொள்ள முடியாது என நெட்டிசன்கள் கருத்துப் பதிவேற்றி வருகின்றனர்.