புத்ராஜெயா, ஜூலை-5 – சுற்றுலா பேருந்துகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் அதிரடிச் சோதனைகளில், மேலும் ஏராளமான ஓட்டுநர்கள் சிக்கி வருகின்றனர்.
முறையான வாகனமோட்டும் உரிமம் இல்லாதது தொடர்பில் கைதாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அதோடு போதைப்பொருள் பயன்பாட்டில் சிக்கியவர்களும் கண்டறியப்பட்டிருப்பதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் சொன்னார்.
புதன்கிழமை இரவு வரை மட்டும் 351 சுற்றுலா பேருந்துகள் சாலைப் போக்குவரத்துத் துறையின் (JPJ) சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
அவற்றில் 4 ஓட்டுநர்களுக்கு முறையான லைசென்ஸ் இல்லை, மேலும் நால்வருக்கு பொது போக்குவரத்து வாகனமோட்டும் உரிமம் (PSV) கிடையாது, போதைப்பொருள் உபயோகம் தொடர்பில் 6 ஓட்டுநர்கள் சிக்கினர்.
பேருந்து நிறுவனங்கள் விதிமுறைகளைப் பின்பற்றி நடப்பதை உறுதிச் செய்ய, இச்சோதனை நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படுமென அந்தோனி லோக் சொன்னார்.
இது ஏதோ பருவ காலம் போன்றதல்ல; 2-3 வாரங்களில் நிறுத்தப்படுவதற்கு….
சிக்கிய ஓட்டுநர்களுக்குப் பதிலாக தகுதிப்பெற்ற மாற்று ஓட்டுநர்களைப் பேருந்து நிறுவனங்கள் அமர்த்த வேண்டும்.
இல்லையென்றால் பேருந்தை எடுக்க விட மாட்டோம் என அந்தோனி லோக் திட்டவட்டமாகக் கூறினார்.