Latestமலேசியா

சுழற்சிப் பொருளாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை மீதான கருத்திணக்க உடன்பாடு: மலேசியாவும் ஜப்பானும் ஒத்துழைப்பை வலுப்படுத்தவுள்ளன

கோலாலம்பூர், ஆகஸ்ட்-18-மலேசியாவும் ஜப்பானும் உத்தேச கருத்திணக்க உடன்பாடு ஒன்றின் வாயிலாக சுழற்சிப் பொருளாதாரத்தை (circular economy) மேம்படுத்துவதிலும் கழிவு மேலாண்மையை நவீனமயமாக்குவதிலும் ஒத்துழைப்பை வலுப்படுத்த இலக்கு கொண்டுள்ளன. அதன் தொடர்பில் வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் Nga Kor Ming இன்று கோலாலம்பூரில் உள்ள ஜப்பானியத் தூதரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் மலேசியாவுக்கான ஜப்பானியத் தூதர் Shikata Noriyukiவைச் சந்தித்து கலந்துரையாடினார்.

கடந்த மாதம் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட அந்த உத்தேச கருத்திணக்க உடன்பாடு, இரு நாடுகளும் தங்கள் ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும், சுழற்சிப் பொருளாதாரம், நிலையான கழிவு மேலாண்மை தொடர்பான நிபுணத்துவம், தொழில்நுட்பம் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக் கொள்ளவும் ஒரு தளமாக அமையும் என Nga Kor Ming தெரிவித்தார்.

வணிக வளாகங்கள் மறுசுழற்சி வசதிகளை வழங்க வேண்டும் என்ற நிபந்தனை, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை படிப்படியாக ஒழிப்பது, பொது இடங்களில் குப்பைகளை வீசுபவர்களுக்குச் சமூகச் சேவை தண்டனை போன்ற முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் கழிவுகளைப் பிரித்தல் மற்றும் மறுசுழற்சி செய்தல் ஆகியவற்றை அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்ற, ஜப்பானின் அனுபவம் மலேசியாவுக்கு உதவும் என அவர் குறிப்பிட்டார்.

நல்ல பழக்க வழக்கங்கள் இளம் வயதிலேயே தொடங்க வேண்டும். கழிவுகளைப் பிரித்தல், மறுசுழற்சி செய்தல் மற்றும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருப்பது குறித்து குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் தூய்மை என்பது வெறும் சட்ட அமலாக்கத்தால் செய்யப்படும் செயலாக இல்லாமல், கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறும் என Nga மேலும் கூறினார்.

இவ்வேளையில் ஜப்பானில் நடைபெறவுள்ள ‘GREEN×EXPO 2027’ கண்காட்சியில் கலந்து கொள்ள மலேசியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அது ஸ்மார்ட் மற்றும் நிலையான நகரங்கள் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை ஆராய்வதற்கான கூடுதல் வாய்ப்புகளை இரு நாடுகளுக்கும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!