நியூயார்க், நவம்பர் 21 – தோழா படத்தில், ஒரே ஒரு துளி கலர் சாயம் மட்டும் உள்ள ஓவியம், கோடிகளில் விற்பனையானதைக் கண்டு நடிகர் கார்த்தி அதிர்ந்துபோவார்.
அதே போல் ஒரு சம்பவம்தான் நியூயார்க்கில் நிகழ்ந்துள்ளது.
அப்படி என்ன ஓவியம் என்று கேட்கிறீர்களா? அது ஓவியமே அல்ல!, உண்ணும் வாழைப்பழம்தான்.
இத்தாலிய ஓவியரான மொரிஸியோ கட்டலன் (Maurizio Cattelan) வாழைப்பழத்தைச் சுவரில் டேப் கொண்டு ஒட்டி, அதற்கு காமெடியன் (Comedian) எனப் பெயர் வைத்து 8.32 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்றுள்ளார்.
கிரிப்டோ தொழிலதிபர் ஒருவர்தான் இந்த வாழைப்பழத்தை வாங்கியிருக்கிறார்.
இவருக்கு, இந்த வாழைப்பழம், அதைச் சுவரில் ஒட்டுவதற்கான நாடா, எப்படி ஒட்டுவது என்று கூறும் வழிகாட்டி முறைகளும் வழங்கப்பட்டுள்ளதாம்.