
எங்கல்பர்க் , மார்க் 20- சுவிட்சர்லாந்தில், ஆல்ப்ஸ் மலைப்பகுதி பனிச்சறுக்கு மையத்தில், புதன்கிழமை காலை பலத்த காற்றின் காரணமாக கேபள் கார் திடீரென அறுந்து , பனிச்சரிவில் உருண்டு விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
மத்திய சுவிட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலைகளின் உச்சியில் அமைந்துள்ள எங்கல்பர்க் டிட்லிஸ் Engelberg Titlis பனிச்சறுக்கு மையத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விபத்து நடந்த நேரத்தில், கேபள் காரில் ஒருவர் மட்டும் தனியாக இருந்தார். கடுமையான காயத்தில் அந்த நபர் மரணம் அடைந்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
எங்கெல்பர்க்கிலிருந்து ஸ்டாண்ட் செல்லும் டிட்லிஸ் எக்ஸ்பிரஸ் கேபள் கார் ட்ரப்ஸீ மத்திய நிலையத்திற்குப் பிறகு விபத்துக்குள்ளானதாக தொடக்கக் கட்ட தகவல்கள் மூலம் தெரியவருகிறது.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட பகுதிக்கு ஒரு ஹெலிகாப்டர் மீட்புக் குழு அனுப்பப்பட்ட போதிலும் கூடுதல் விவரங்கள் எதனையும் பெறமுடியவில்லை. எனினும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதால் கருத்து தெரிவிப்பதற்கு அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
விபத்து நடந்த நேரத்தில் அப்பகுதியில் மணிக்கு 93 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக சுவிஸ்லாந்து வானிலை ஆய்வு அலுவலகம் தெரிவித்தது. மணிக்கு 40 கிமீ வேகத்தில் காற்று வீசும்போது, இதுபோன்ற கேபிள் கார்களுக்கு காற்று எச்சரிக்கை செயல்படுத்தப்படும்.
அந்த வேகத்தில், ஊழியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பார்கள். மணிக்கு 60 கிமீ வேகத்தில், காற்று வீசும்போது மற்றொரு எச்சரிக்கை வெளியிடப்படும்போது கேபல் கார் சேவையை நிறுத்த வேண்டியிருக்கும் என அந்த உல்லாசத் தளத்தின் ஸ்கை லிப்ட் தலைவர் நோர்பர்ட் பிராட் ( Norbert Pratt) தெரிவித்தார்.



