சூடான், ஜூன்-7 – உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட வட கிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் தொடரும் வன்முறைகளில், புதிதாக 35 குழந்தைகள் உட்பட அப்பாவி மக்கள் 150 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அஞ்சப்படுகிறது.
நாடு இராணுவத்தின் கட்டுப்பாட்டில் போன இந்த 13 மாதங்களாக, சூடானிய ராணுவத்துக்கும், RSF என தங்களை அழைத்துக் கொள்ளும் துணை ராணுவ ஆதரவு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு அடிக்கடி துப்பாக்கிச் சூடும் கலவரங்களும் நடைபெற்று வருகின்றன.
ஆகக் கடைசியாக மத்திய சூடானில் உள்ள கிராமத்தில் நடைபெற்ற மோதலில் தான் இந்த 150 பேரும் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
இப்புதியத் தாக்குதலுக்கு RSF படை பொறுப்பேற்கவில்லை; எனினும் வியாழன்று 2 இராணுவத் தளங்களைத் தாக்கியதை அது ஒப்புக் கொண்டது.
அம்மோதலை அடுத்து, கொத்துக் கொத்தாய் சடலங்கள் வெள்ளைத் துணிகளால் சுற்றப்பட்டு புதைக்கப்பட தயாராக இருப்பதைக் காட்டும் காணொலிகள் வைரலாகி பார்ப்போரின் நெஞ்சைப் பதற வைக்கும் வகையில் இருக்கின்றன.
கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தோரின் உண்மையான எண்ணிக்கை இன்னும் கூடுதலாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
சூடானில் கடந்த ஒரு வருட காலத்தில் மட்டும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறார்கள் பலியாகினர் அல்லது காயமடைந்தனர்.
50 லட்சம் மக்கள் இருப்பிடங்ளை காலி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
நூற்றுக்கணக்கானோர் துணை இராணுப் படைக்குக் கட்டாய ஆள் சேர்ப்புக்கு உட்படுத்தப்பட்ட வேளை, பலர் கடத்தப்பட்டும், பெண்கள் கற்ழிக்கப்பட்டும் வரும் அவலங்கள் அங்கு நடந்து வருவது உலக நாடுகளைக் கவலையடையச் செய்துள்ளது.
சூடானில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டினரில் இந்திய பிரஜைகள் உள்ளிட்ட 150 பேர் முன்னதாக அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.