ஜொகூர் பாரு, ஜூன்-11 – ஜொகூர் மாநில அளவில் மேற்கொள்ளப்பட்ட Ops Dadu Khas சூதாட்ட தடுப்புச் சோதனைகளில் 18 முதல் 67 வயதுக்குட்பட்ட 102 பேர் கைதாகியுள்ளனர்.
முறையான பயண பத்திரம் வைத்திராத 11 வெளிநாட்டவர்களும் அவர்களில் அடங்குவர் என மாநில போலீஸ் தலைவர் கமிஷ்னர் எம்.குமார் தெரிவித்தார்.
ஜூன் 8 முதல் 10 வரை மேற்கொள்ளப்பட்ட அச்சோதனைகளில் குற்றப்புலனாய்வுத் துறையைச் சேர்ந்த 15 போலீஸ் உயர் அதிகாரிகளும் 96 போலீஸ்காரர்களும் பங்கேற்றனர்.
மாநிலம் முழுவதும் 47 வளாகங்கள் மற்றும் 40 இடங்களில் 87 சோதனைகளை நடத்தியதில் கைதானவர்களில் 12 பெண்களும் அடங்குவர்.
இணைய சூதாட்டம், உரிமம் பெறாத பொது லாட்டரி சீட்டு மற்றும் பிற சூதாட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் ஒழிப்பதே அம்மாபெரும் சோதனை நடவடிக்கையின் நோக்கமாகும் என கமிஷ்னர் குமார் சொன்னார்.
அவர்களிடம் இருந்து 15,195 ரிங்கிட் ரொக்கம், 94 கைப்பேசிகள், 104 சூதாட்ட அட்டைகள், இணைய இணைப்புக் கருவிகள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
கைதானவர்கள் அனைவரும் 1953-ஆம் ஆண்டு சூதாட்ட மையங்கள் சட்டத்தின் கீழ் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்படுகின்றனர்.
இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் 10 வரை குற்றப்புலனாய்வுத் துறை மேற்கொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட சோதனைகளில் மொத்தமாக 1,594 பேர் பல்வேறு சூதாட்ட குற்றங்களுக்காகக் கைதானதாக குமார் மேலும் கூறினார்.