செக் குடியரசு, ஏப்ரல்-3, செக் குடியரசில் பயிற்சி மருத்துவமனையின் கவனக்குறைவால் ஆள் மாறி, பெண்ணிண் வயிற்றில் இருந்த 4 மாத கரு கலைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்ற அப்பெண்ணை, தவறுதலாக அறுவை சிகிச்சை அறைக்குக் கொண்டுச் சென்றதால், அத்துயரம் நிகழ்ந்திருக்கிறது.
அங்கு அவருக்கு கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில், வயிற்றில் சுமந்த கரு பரிதாபமாகக் கலைந்திருக்கிறது.
அது உண்மையில் வேறொருப் பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டிய கருக்கலைப்பு அறுவை சிகிச்சையாகும்.
அறுவை சிகிச்சைக்கு முன்பு வரை கூட, ஆள் மாறியிருப்பதை மருத்துவக் குழு கவனிக்கவில்லை என்பது வேதனையாகும்.
தமக்கு ஏன் மயக்க மருந்து கொடுக்கப்படுகிறது என அப்பெண்ணுக்கும் தெரியவில்லை.
அம்மாபெரும் தவற்றுக்காக அப்பெண்ணிடமும் மொத்த குடும்பத்திடமும் மன்னிப்புக் கேட்டுக் கொண்ட மருத்துவமனை நிர்வாகம், அவருக்கு உரிய இழப்பீடு வழங்க ஒப்புக் கொண்டுள்ளது.
ஆள் மாறி அறுவை சிகிச்சை செய்த மருத்துவக் குழு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.